MLA க்கள் அறிக்கை தாக்கல் செய்ய கோரிய வழக்கு: தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

26 August 2020, 3:21 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: தமிழகத்தில் உள்ள MLA க்கள் தங்கள் தொகுதியில் மேற்கொண்ட மக்கள் பணி குறித்து வாரம் ஒரு முறை முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என கூறி தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூனியூரை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தற்போது வரை சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. ஏரிகள், குளங்கள் தூர் வார வில்லை. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி பணிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. ஆனால் MLA க்களுக்கு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும், இதர படிகள் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கடந்த 2019 ஆண்டு வெளியான தகவலின் படி கடந்த 5 ஆண்டுகள் வளர்ச்சி பணிக்காக, மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கிய 62 சதவீத பணத்தை திருப்பி அனுப்பி உள்ளது.

எனவே, மூன்று மாதத்திற்கு ஒரு முறை தங்கள் வங்கி கணக்கு இருப்பு, வங்கி பரிவர்த்தனை குறித்து இணையத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள MLA க்கள் தங்கள் தொகுதியில் மேற்கொண்ட மக்கள் பணி குறித்து வாரம் ஒரு முறை முன்னேற்ற அறிக்கை தாக்கால் செய்ய வேண்டும் என உத்தரவிடகோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு பொது நல மனுவாக விசாரணைக்கு ஏற்க இயலாது என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.