19 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்ட மாணவர்கள்..!

Author: Aarthi Sivakumar
1 November 2021, 12:34 pm
Quick Share

கோவை: தமிழகத்தில் கடந்த 19 மாதங்களுக்கு பிறகு நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன இலையில் கோவை மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் போரின் தாக்கம் குறைந்து நிலையில் இன்று 1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்குகிறது.

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி ,19 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வகுப்பிற்கும் வரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பலூன், பொம்மை மாஸ்க் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை மைதிலி கூறியதாவது, ஒரு வகுப்புக்கு 20 பேர் என சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளோம்.

பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பறைக்கு வெளியேயும் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு மனமகிழ் வகுப்புகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. அதோடு மாணவர்களுக்கு பாடம் சம்மந்தப்பட்ட வெவ்வேறு விளையாட்டுகளை ஆசிரியர்கள் தயாரித்து வந்துள்ளனர்.

வகுப்பில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கடந்த மூன்று தினங்களாக பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடத்தப்பட்டது என அவர் கூறினார்.

பள்ளிக்கு வந்த மாணவர்கள் கூறுகையில், ” இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக மட்டுமே படித்து வந்தோம். வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. எங்களது நண்பர்களைப் பார்த்து அவருடன் பேசி, விளையாட போவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.

Views: - 405

0

0