பெண்களை கேலி செய்வதாக காவல்நிலையத்தில் புகார்:புகார் கொடுத்த நபர் வெட்டி படுகொலை

Author: kavin kumar
25 August 2021, 3:33 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்களை கேலி செய்வதை பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார்.அதே பகுதியில் நடு தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் அடிக்கடி முருகன் பகுதியை சேர்ந்த பெண்களை கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இதனை முருகன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முருகன் அவர் இருக்கும் பகுதியைச் சேர்ந்த சிலருடன் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்திற்கு சென்று பெண்களை கேலி செய்யும் லாரன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் நேற்று இரவு முருகனின் வீட்டின் முன்பு அவரது மனைவி கவிதா மற்றும் அம்மா மனைவியின் தம்பி ராஜா ஆகியோர் இருந்துள்ளனர்.

அவர்களது அருகில் முருகன் படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த லாரன்ஸ் முருகனை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த ராஜாவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. லாரன்ஸ் வெட்டியதில் படுகாயம் அடைந்த முருகனை உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் போது செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டது.

சிறிய காயம் அடைந்த ராஜாக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக இறந்த முருகனின் மனைவி கவிதா கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை செய்த லாரன்ஸ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். பெண்களைக் கேலி செய்ததை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் முருகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பாட்டக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 172

0

0