மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிப்ளமோ இன்ஜினியர் அடித்துக்கொலை

2 July 2021, 4:57 pm
Quick Share

திருச்செந்தூர்: திருச்செந்தூரில்மது போதையில் ஏற்பட்ட தகராறில் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து டிப்ளமோ இன்ஜினியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சிவமுருகன் (24).இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது அவருக்கு புனேவில் வேலை கிடைத்துள்ளது. இதனால் புனே செல்வதற்கு முன்பு திருச்செந்தூரில் வந்து இருந்துள்ளார். இந்தநிலையில் சிவமுருகன் கடந்த சில நாட்களாக நண்பர்களுடன் மது அருந்தி வந்துள்ளார். நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாலை வரை வீடு திரும்பாததால் அவரது தாயார் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சிவமுருகன் உடன் இருந்த சக நண்பர் ஒருவர் செல்போனை எடுத்து சிவமுருகன் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரவு 10.30 மணி வரை சிவமுருகன் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிவமுருகனை திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து தேடியுள்ளனர். அப்போது சிவமுருகன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சமையல் கூடம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிவமுருகன் சக நண்பர்களுடன் நேற்று மதியம் முதல் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சமையல் கூடம் அருகில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அப்போது சிவ முருகனுக்கும் வீரபாண்டியபட்டனம் வாவு நகர் சங்கர் மகன் சண்முகசுந்தரதிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனிருந்த நண்பர்கள் இருவரையும் வீட்டிற்கு செல்லும் படி அறிவுறுத்தி அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் சிவமுருகன் மற்றும் சண்முகசுந்தரம் இரண்டு பேரும் அங்கிருந்து தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சிவ முருகனுக்கும் சண்முகசுந்தரதிற்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் அருகில் கிடந்த விறகு கட்டையால் சிவமுருகன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த சிவமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சண்முகசுந்தரம் அங்கிருந்து சென்று விட்டார்.

இதனையடுத்து சண்முக சுந்தரத்தை பிடித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. மேலும் தற்போது கொரொனா தடுப்பூசி முகாமும் உள்ளது.இந்தநிலையில் இந்த பள்ளிக்கு இரவு நேர காவலர்கள் கிடையாது. இதனால் இங்கு இரவு நேரத்தில் மது அருந்துபவர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.

Views: - 121

0

0