தேர்தல் முன்விரோதத்தில் மீனவர் வெட்டி கொலை… கிராமத்தை சூறையாடி தீ வைத்த உறவினர்கள்…

2 August 2020, 4:42 pm
Quick Share

கடலூர்: கடலூர் அருகே தாழங்குடாவில் மீனவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

கடலூர் அருகே உள்ள தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது ஊராட்சி மன்ற தலைவராக மதியழகன் மனைவி சாந்தி உள்ளார். உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாசிலாமணி தரப்பினருக்கும், மதியழகன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மாசிலாமணியின் தம்பியான மீனவர் மதிவாணன்(36) என்பவர் நேற்று இரவு பத்துக்கு மேற்பட்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்தும் மாசிலாமணியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தரப்பினர், அங்கு திரண்டு வந்தனர். மதிவாணன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் தாழங்குடா கிராமத்திற்கு சென்று வீடுகளை அடித்து, சூறையாடினர். தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர்.

மேலும் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட படகுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகளுக்கும் தீ வைத்து, விட்டு அந்த தரப்பினர் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்களை பிடித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு தாழங்குடா கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதிவாணன் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0