விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

19 August 2020, 7:57 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன்படி தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24.03.2020 முதல் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டு 31.08.2020-ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரையில் ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 22ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும்,

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கோ அனுமதி இல்லை. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ,

சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திட வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும்அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையான,

வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு பொதுமக்களும், திருக்கோயில் நிர்வாகத்தினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி தெரிவித்துள்ளார்.