போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

27 November 2020, 10:36 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளதா, ஏதேனும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கடலோர காவல்படையினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். கன்னியாகுமரியிலிருந்து 10 கடல்மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த ஒரு படகு வந்தது. அந்த படகில் 6 பேர் இருந்தனர். இதனால் கடலோர காவல்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அந்த விசைப்படகில் உள்ள ஒரு காலி டீசல் டேங்க்கில் 99 போதைபொருள் பாக்கெட்டுகள் இருந்தன. இதில் சுமார் 100 கிலோ ஹெராயின் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் படகில் 20 சிறிய பெட்டிகளில் மறைத்து வைத்து இருந்த 3 கிலோ கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் போதை பொருளும்,

5 துப்பாக்கிகளையும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.500 கோடி என்று கூறப்படுகிறது. இதே போன்று மெத்தலின் பீட்டாமைன் போதை பொருள் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.100 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் துரையா வகை 2 சேட்டிலைட் செல்போனை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். பிரீபெய்டு வகையை சேர்ந்த இந்த செல்போன் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கடலோர காவல்படை ரோந்து கப்பல் கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து படகில் இருந்த 6 பேரையும் கடலோர காவல்படையினர்,

மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், தென்மண்டல இயக்குனர் புருனோ, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ரா உளவுப்பிரிவு அதிகாரி சார்லஸ் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 6 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் நீர்க்கொழும்பை சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல்(வயது 40), வானகுல சூரியஜீவன்(30), சமீரா(32), வர்ணகுலசூர்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா(29), நிசாந்த் கமகே, லட்சுமணகுமார்(37) என்பது தெரியவந்தது. மேலும் 6 பேரும் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த ஒரு படகை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அங்கிருந்து போதை பொருட்களை வாங்குவதற்காக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்று உள்ளனர்.

அதே நேரத்தில் ஈரானில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு பாய்மரப் படகில் போதை பொருளை ஏற்றி வந்து, நடுக்கடலில் வைத்து படகில் ஏற்றி உள்ளனர். அதன்பிறகு 6 பேரும் போதை பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த நிலையில் இந்திய கடல் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக படகின் ஒரு டீசல் டேங்கில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் டீசல் காலியானதால் மேற்கொண்டு படகை இயக்க முடியாமல் தவித்து உள்ளனர். அப்போது காற்றின் வேகத்தில் அந்த படகு இந்திய கடல் பகுதிக்குள், கன்னியாகுமரியில் இருந்து 10 கடல்மைல் தொலைவுக்குள் வந்துள்ளது. அப்போது கடலோர காவல்படையினரிடம் பிடிபட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கடலோர காவல்படையினர் கைது செய்யப்பட்ட 6 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். மாலையில் அங்கிருந்து ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இவர்கள் மீது மதுரை மத்திய போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணையில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உடற் பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் 6 பேரும் தூத்துக்குடி இரண்டாம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உமாதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

Views: - 18

0

0