சிவன் கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை: காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

3 July 2021, 1:31 pm
Quick Share

தருமபுரி: நெசவாளர் காலனியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி நகர் பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, மற்றும் மங்களாம்பிகை மஹாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் உள்ளிட்ட வழிபாடுகள் விமர்சையாக கொண்டாடப்படும். பக்தகோடிகள் தருமபுரி மாவட்டம் முழுவதும் இருந்து இந்த கோயிலுக்கு வந்து மகாலிங்கேஸ்வரரை விரதமிருந்து வழிபடுவது வழக்கம். தற்பொழுது மகாலிங்கேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகத்திற்காக புனரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் நேற்று இரவு பூஜைகள் முடித்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் கோயிலின் பின்புறம் கோயில் சுவர் ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக உள்ளது. அதன் அருகில் உள்ள வேப்பமரத்தில் ஏரி கோவிலின் ஜன்னல் இரும்பு கம்பிகளை தகர்த்தெறிந்து உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் கோவிலில் உள்ள பீரோக்களை உடைத்து அதில் உள்ள மங்களாம்பிகைக்கு அணிவிக்கப்படும் அரை பவுன் தங்கத் தாலி, மஹாலிங்கேஸ்வரருக்கு அணிவிக்கப்படும் ஒரு கிலோ வெள்ளி கிரீடம், திருநீர் பட்டை, 4 வெள்ளிக்காசுகள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றதாகவும், இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் கோயில் பூசாரி தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த நகர காவல்துறையினர் திருடுபோன மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 191

0

0