காதல் மனைவியை பிரிக்க முயன்ற பெற்றோர்: தற்கொலை முயற்சி செய்த காதல் கணவன்

30 September 2020, 6:24 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை பெற்றோர் அழைத்துச் சென்றதால் காதல் கணவன் மனமமுடைந்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள சோக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் தேவராஜ் (24). இவரும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் சௌமியா (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சௌமியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரது குடும்பத்தினரும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, புரட்டாசி மாதம் முடிந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய சௌமியாவின் பெற்றோர், மகளை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். அதன்பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்ட சௌமியாவின் உறவினர்கள், இருவரையும் பிரித்து விடவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேவராஜ் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், காதல் திருமணம் செய்துகொண்ட இருவரையும் உடனடியாக சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேவராஜின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ள நிலையில், இருவரையும் பிரிக்க முற்பட்டதால், காதல் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.