குறைந்த விலையில் செல்போன் – OLX இணையதளம் மூலம் மோசடி செய்த இளைஞர் கைது

27 September 2020, 6:58 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூர் அருகே OLX இணையதளம் மூலம் குறைந்த விலையில் செல்போன் வழங்குவதாக கூறி ரூ.1,95,000 மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கம்பியூட்டர் சர்வீஸ் செய்து வருகிறார். புதியதாக ஐ போன் ஒன்றை வாங்குவதற்காக இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது குரோம்பேட்டையை சேர்ந்த அரவிந்த் என்பவர் OLX ல் விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த விக்னேஷ் , அரவிந்த் தொடர்பு எண்ணை இணையதளத்தில் பார்த்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார். பேசும் போது , ஒரு செல்போன் மட்டும் வழங்க முடியாது , மொத்தமாக 10 செல்போன் குறைந்த விலைக்கு தருகிறேன் என்று அரவிந்த் கூறுகிறார். இதனை விக்னேஷ் ஏற்று கொள்கிறார்.

பின்பு , ஒரு குறிப்பிட்ட பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என அரவிந்த் கூற , விக்னேஷ் முதல் கட்டமாக 30 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்பு ஓரிரு நாட்களில் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்த அரவிந்த் கூறியுள்ளார். இதே போன்று 4 முறை பணம் செலுத்தியுள்ளார் விக்னேஷ். மொத்தமாக ரூ.1,95,000 செலுத்திய பின்பு , சரியாக பதில் அளிக்காமல் 3 மாதமாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் விக்னேஷ் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரவிந்தை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு 5 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன் என்று அரவிந்தை கொடுங்கையூருக்கு நேரில் வர வைக்கிறார் விக்னேஷ். பணத்திற்கு ஆசைப்பட்டு போலீசார் விரித்த வலையில் சிக்கிய அரவிந்தை கைது செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில், இதே போல் குரோம்பேட்டை பகுதியிலும் செல்போன் தருவாதாக பணத்தை ஏமாற்றியதும் , பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்தது. பின்பு பணம் திரும்ப கொடுக்கப்பட்டதால் வழக்கு எதுவும் கொடுக்காமல் பாதிக்கப்பட்டவர் பணத்தை பெற்று கொண்டு சென்றுள்ளார். கொடுங்கையூரில் ஏமாற்றியதற்காக , தற்போது அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கொடுங்கையூர் போலீசார் சிறையில் அடைத்தனர்.