ஆடு மேய்க்க அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் மீட்பு: அடித்து சித்ரவதை செய்த இருவர் மீது வழக்கு பதிவு…

Author: Udhayakumar Raman
23 July 2021, 8:56 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் ஆடு மேய்க்க சிறுவர்களை அழைத்து வந்து அடித்து சித்ரவதை செய்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த புறாசுந்தரம், விசாலாட்சி தம்பதியினருக்கு பிறந்த ராஜ்குமார் மற்றும் ரஜினி ஆகிய இரு சிறுவர்களை தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ் மற்றும் விஜய் என்கிற இரண்டு நபர்கள் செம்மரி ஆடு மேய்ப்பதற்காக பெற்றோர்களின் ஏழ்மையை பயன்படுத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு இரண்டு சிறுவர்களையும், கொத்தடிமைகளாக அழைத்து வந்துள்ளனர். ஆடு மேய்க்கும் இடத்தில் அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த விஜய் மற்றும் சதீஷ் அந்த இரண்டு சிறுவர்களையும் கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் அடி வாங்குவதை தாங்க முடியாமல் ராஜ்குமார் மற்றும் ரஜினி சகோதரர்கள் அருகில் உள்ள அமிர்தவல்லி கிராமத்திற்கு நேற்று இரவு தப்பி ஓடிச் சென்று உள்ளனர்.

அப்பொழுது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இரண்டு சிறுவர்களையும் அழைத்து விசாரித்த பொழுது நடந்த சம்பவத்தை கிராம மக்களிடம் தெரிவிக்கின்றனர். அதனை அடுத்து உடனடியாக கிராம மக்கள் வலங்கைமான் காவல்துறையினருக்கும், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினரருக்கும், தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் குழந்தைகளை மீட்டு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன் இரண்டு சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிறுவர்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து சிறுவர்களை துன்புறுத்தியதாக விஜய் மற்றும் சதீஷ் 2 பேர் மீதும் வலங்கைமான் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களையும் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதனனிடம் ஒப்படைத்து உடனடியாக சிறுவர்களை கடலூர் குழந்தைகள் நல குழு அமைப்பிற்கு அழைத்துச் செல்ல திருவாரூர் கோட்டாட்சியர் பாலச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் குழந்தைகளை மீட்ட குழந்தைகள் நல அணி உறுப்பினர்கள் முருகேஷ் மற்றும் மரகதமணி உள்ளிட்டோரை கோட்டாட்சியர் பாராட்டினார்.

Views: - 194

0

0