சமூக இடைவெளி கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

14 September 2020, 8:08 pm
Quick Share

அரியலூர்; அரியலூர் மாவட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காத அரியலூர் பகுதி வணிக நிறுவனங்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் முழு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கடைகளும் திறக்கபட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்க வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவம் அல்லா மேற்பார்வையாளர், உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் இன்று அரியலூர் கடைவீதிகளில் உள்ள ஜவுளிகடை, மளிகைகடை, பாத்திரகடை, பேக்கரி உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கபடுகிறதா, பணியாளர்கள் முககவசம் அணிந்துள்ளார்களா என்பதை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு 200 ரூபாய் அபாரதமும் விதித்தனர். மேலும் இதுபோல் தொடர்ந்தால் அடுத்தமுறை 5000 ரூபாய் அபராதம் விதிக்கபடும் எனவும் எச்சரித்தனர்.