புதுச்சேரியில் மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடக்கம்

Author: Udayaraman
8 October 2020, 4:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு 5-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகைக்கான ஏற்பாடுகளை செய்தது. குறிப்பாக வகுப்பறை சுத்தம் செய்தல் மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுமுதல் வகுப்புகள் தொடங்குகின்றன. முதற்கட்டமாக இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்குகிறது.

அதாவது மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் அதைக் கேட்டு புரிந்து கொள்வதற்காக இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகள் வாரத்திற்கு ஆறு நாட்கள் நடைபெறும் என்றும், மூன்று நாட்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெறும் என்று கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வகுப்புகளின் நேரம் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. இந்த வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களின் அனுமதி கடிதத்தை கொண்டுவரவேண்டும் என்றும், அதே போல வரும் மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாது என்பதால் மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வகுப்புகளை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வார்கள் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Views: - 37

0

0