தேர்தலை நடத்த முடிவு எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு பாஜக மாநில தலைவர் கண்டனம்

Author: kavin kumar
10 October 2021, 6:32 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பண்டிகை காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரியில் அவசர கோலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு இட ஒதுக்கீட்டை மறுத்தும், தீபாவளி, மீலத்நபி, கல்லறை திருவிழா, தசரா உள்ளிட்ட பண்டிகை காலங்களை கருத்தில் கொள்ளாமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சியினர் கருத்துக்களை கேட்காமல்,

புதுச்சேரி தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தன்னிச்சையாக அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது என தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தல் தேதியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் இட ஒதுக்கீடு, வார்டு மறுசீரமைப்பில் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை சரிசெய்து விட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரம் குறித்து தேவைப்பட்டால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் சாமிநாதன் தெரிவித்தார்.

Views: - 198

0

0