திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் கிடையாது: திமுக எம்.எல்.ஏ மூர்த்தி பேட்டி…

19 September 2020, 9:48 pm
Quick Share

மதுரை: திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் 72 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சம் புது உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்து மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- திமுக முப்பெரும் விழா மற்றும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் அவர்கள் இணைய தளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி
72 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

25 லட்சம் உறுப்பினர்கள் மேலும் சேர்க்க உள்ளோம். உறுப்பினர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் கிடையாது. ஒராண்டு காலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். உறுப்பினர்கள் ஓராண்டு காலம் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு கழகத்தில் அவர்களின் சிறப்பான பணியினை செய்தால் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர். மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மதுரை வடக்கு மாவட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கி வருகிறோம்.

மேலும் பகுதி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். கழகத்தில் சேர விரும்புகிறவர்களின் பகுதிக்கே சென்று உறுப்பினர் சேர்க்கை நடை பெறுகிறது. ஒரு மாத காலத்திற்குள் மதுரை கிழக்கு , மேலூர், சோழவந்தான் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். அரசு மற்றும் தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்கள் உறுப்பினர்களாக சேர தயாராக உள்ளனர்.

எவ்வித கட்டணமும் இன்றி உறுப்பினராக சேர்த்து அடையாள அட்டை வழங்க உள்ளோம். திமுகவில் பெண்கள் உறுப்பினராக சேர அதிக ஆர்வமாக உள்ளனர். முன்பு 25 பேரை சேர்த்தால் தான் அந்த படிவம் தலைமைக்கு சென்று வரும், தற்போது ஒருவர் சேர்ந்தால் கூட ஆன்லைன் மூலமாக உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக இலக்கு நிர்ணயிக்கவில்லை. ஒன்றிணைவோம் வா திமுகவின் இந்த திட்டத்தால் அனைத்து வீட்டிற்கும் 5 கிலோ அரிசி, 1லட்சத்து 40 ஆயிரம் வீடுகளுக்கு கபசுர குடிநீர் என கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. அதன் பின்னர்தான் அரசு நிவாரணம் வழங்கியது.

தமிழக முதல்வர் கொரானாவை கட்டுப்படுத்திட்டோம், கட்டுபடுத்திட்டோம் எனக் கூறினார்கள். நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் பற்றாக்குறைதான் காரணம். கொரோனா நோயாளியை சுகாதார அதிகாரிகள் நேரடியாக சந்திக்காமல் போன் மூலமாகவே பேசிவருகின்றனர். இதற்கு மருத்துவர்கள் வேலைப்பழு தான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.