திருச்சி 2வது தலைநகராக்க வேண்டும் : கொடியேற்று விழாவில் உறுதிமொழி!!
25 August 2020, 1:24 pmதிருச்சி : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 25வது ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கொடியேற்று விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு திருச்சி பாலக்கரை பிரபாத் சந்திப்பு பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன்பு கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவர் உதுமான் அலி கட்சி கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார். இதையொட்டி அங்கு இருந்த பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து உதுமான் அலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்துள்ளோம். மருத்துவ உதவி, கல்வி உதவி, வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று அனைத்து விதமான இயற்கை சீற்றங்களிலும் அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்துள்ளோம். தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை உருவாக்க வேண்டும். திருச்சி காந்தி மார்க்கெட் பிரச்சனை தற்போது எழுந்துள்ளது. மக்களுக்கு எந்த இடம் சௌகரியமாக இருக்குமோ அந்த இடத்தில் மார்க்கெட்டை அமைக்க வேண்டும். இது தொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.