தாய்மாமனின் மகன் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

Author: Udhayakumar Raman
31 August 2021, 1:28 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே தாய்மாமனின் மகன் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் தாய்மாமன் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் அப்பெண்ணின் பிரேதத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஏ.கொல்ல அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காவேரியப்பன். இவரது மகள் ஞானமொழி இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். காவேரியப்பனின் மனைவியின் அண்ணணான தங்கவேல். இவரது மகன் முரளிதரன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். ஞானமொழியின் தாய்மாமனின் மகனான முரளிதரனை இருவீட்டாரின் பெற்றோர்களும் சிறு வயதிலிருந்தே திருமணம் செய்து கொடுப்பதாக கூறி வந்துள்ளனர். இதனால் இருவரும் கடந்த 12 வருடங்கனாக காதலித்து வந்த நிலையில் ஞானமொழி கர்ப்பமடைந்து 2 முறை கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முரளிதரனுக்கு வேறு ஒரு பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்ததை அறிந்த ஞானமொழி தனது தாய்மாமன் வீட்டிற்கு நேற்று மாலை சென்று முரளிதரன் மற்றும் அவரது பெற்றோர்களிடம் திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளார். அதற்கு முரளிதரனின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததையடுத்து விரக்கியடைந்த ஞானமொழி தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை அவர்களது கண்முன்னே குடித்துள்ளார் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஞானமொழியை அருகே இருந்தவர்கள் அவரை தருமபுரி அரசு மருத்தவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

அதனையடுத்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று ஞானமொழியின் உறவினர்கள் பெண்ணின் இறப்பிற்கு நியாயம் கேட்டும் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட ஞானமொழியை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அவரது தாய் மாமன் குடும்பத்தார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதத்தை வாங்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகர காவல் ஆய்வாளர் சரவணன் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து ஞானமொழியின் உடலை வாங்கிச் சென்றனர்.

Views: - 143

0

0