தனியார் தொண்டு நிறுவனம் மீது பெண்கள் அமைப்பினர் புகார்…

5 August 2020, 8:04 pm
Quick Share

திருச்சி: முசிறி அருகே மகளிர் குழு பெண்களை ஏமாற்றிய தனியார் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கரட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 18 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திருச்சியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று முசிறியில் உள்ள இந்தியன் வங்கி மூலம் ஒரு குழுவிற்கு தலா இரண்டு லட்சம் வீதம் 18 குழுக்களுக்கு 36 லட்சம் ரூபாய் கடன் பெற்று கொடுத்துள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் தொகைக்காக மாதந்தோறும் ரூபாய் 5 ஆயிரம் தவணை தொகை வங்கியில் செலுத்துவதற்கு தனியார் தொண்டு நிறுவன பணியாளர்களிடம் கடந்த முப்பது மாதங்களாக கொடுத்து வந்துள்ளனர்.

தற்போது மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் உதவி அளித்த முசிறி இந்தியன் வங்கியிலிருந்து சில குழுக்களுக்கு கடன் நிலுவை தொகை உள்ளது. அதனை உடன் செலுத்தும்படி கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தனியார் தொண்டு நிறுவன பணியாளரிடம் கேட்டதற்கு அவர்கள் சரிவர பதில் கூறவில்லை என தெரிகிறது. முசிறி இந்தியன் வங்கியில் வந்து குழு பெண்கள் விசாரித்ததில் தவணை தொகை தனியார் தொண்டு நிறுவனம் வசூலித்த தொகையை முழுமையாக கட்டி முடிக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமையில் சுய உதவிக்குழு பெண்கள் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோட்டாட்சியர் துரைமுருகனிடம் புகார் மனு அளித்தனர். புகார் மீது முசிறி போலீஸ் டிஎஸ்பிக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து உரிய விசாரணை செய்து நியாயம் கிடைக்க செய்வதாக பொதுமக்களிடம் கூறினார். பின்னர் முசிறி இந்தியன் வங்கி மேலாளரிடமும் புகார் அளித்தனர். மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் கடன் பெற்றுக் கொடுத்த பின்னர் அந்த தொகையை வசூலித்து விட்டு முழுமையாக வங்கியில் கட்டாதது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 6

0

0