அரசுப் பள்ளியில் கம்பி வேலி சாய்ந்து விபத்து : 4ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் காயம்.. போதிய வகுப்பறை இல்லாததால் நேர்ந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 1:54 pm
School Girl Injury -Updatenews360
Quick Share

திருப்பூர் : விஜயாபுரம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுற்றுப்புற கம்பிவேலி விழுந்ததில், நான்காம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளுக்கு காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அடுத்த விஜயாபுரம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

போதிய அளவிற்கு வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ மாணவிகளை பள்ளியின் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமர்த்தி வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சமுதாய கூடத்தில் இருந்து இன்று காலை நான்காம் வகுப்பு மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் துவக்க பள்ளிக்கு அழைத்து வந்தனர். அப்பொழுது வரிசையாக மாணவ மாணவிகள் நடந்து வந்தபோது சமுதாய கூடத்தின் சுற்றுப்புற முன் பகுதியில் உள்ள கம்பி வேலியில் ஒரு மாணவியின் உடை சிக்கியது.

அது தெரியாமல் அந்த மாணவி வேகமாக நடக்க முற்பட்டபோது கம்பி வேலியின் கல்லானது கீழே சாய்ந்தது. இதில் 4ம் வகுப்பு பயிலும் ஜெபராணி (வயது 9), மகிழ்ந்தி(வயது 9), கவிமலர்(வயது 9) ஆகிய மூன்று மாணவிகளுக்கு காலில் லேசான அளவு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த மாணவிகளை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.

Views: - 1247

0

0