சீல்-ஐ அகற்றி அதிமுக அலுவலகம் திறப்பு… உள்ளே சென்ற சி.வி. சண்முகத்திற்கு அதிர்ச்சி… ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க முடிவு..!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 4:40 pm
Quick Share

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றிய பிறகு, உள்ளே சென்ற அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை விவகாரம் எழுந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என மீண்டும் இரு அணிகள் உருவானது. அதிமுக தலைமை யாருக்கு என்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கே பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. ஓபிஎஸ்-க்கு சொற்ப உறுப்பினர்களே ஆதரவளித்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், கடந்த 11ம் தேதி பல தடைகளை கடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேவேளையில், தங்களின் ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் ஏராளமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகக் கூறி, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேவேளையில், வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்.

இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பை அளித்தது. அதில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டதுடன், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்ககூடாது எனவும், பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவியை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், அலுவலக ஊழியர்கள் சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டனர்.

பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அதிமுக அலுவலகத்தில் வன்முறை ஏற்பட்டு சீல் வைக்கப்பட்டதால், பொருட்களின் சேத விவரங்கள் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், அதிமுக அலுவலகம் இன்று திறக்கப்பட்ட நிலையில், அதிமுக அலுவலகத்தில் உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் கார்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து சி.வி.சண்முகம் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து, சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அதிமுக தலைமை அலுவக நிர்வாகிகள் கணக்கெடுத்துள்ளனர். அப்போது, அதிமுக தலைமைக் கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என்றும், கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை என்றும் அதிமுகவினர் புலம்பி வருகின்றனர். மேலும், பொருட்களையும், ஆவணங்களையும் எடுத்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Views: - 475

0

0