அக்னிபாதை திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்… தவறாக புரிந்து வன்முறையை தூண்டுகின்றனர் : ஆளுநர் ரவி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 5:38 pm
Governor Ravi - Updatenews360
Quick Share

இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆரன் ரவி கூறியுள்ளார்.

தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணமாக வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் அவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வ.உ.சி. 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர், கல்லூரி முன்பு இருந்த சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த வஉசியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தொழில்முனைவோர்கள், சிறந்த கல்வியாளர், சிறந்த சைவ சித்தாந்தவாதி, சிறந்த விவசாயி, சிறந்த சுதேசி ஏற்றுமதியாளர் என எட்டு பேருக்கு வ.உ.சி விருதுகளை அவர் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், தேசம் சுபிட்சம் அடையாமல் நாம் சுபிட்சம் அடைய முடியாது, அதற்காகப் பாடுபட்ட நம்முடைய தேசத் தலைவர்களை நாம் கண்டிப்பாக நினைவுகூற வேண்டும். இது நம்முடைய கடமையாகும். தேசத்தலைவர்கள் தேசத்திற்கு ஆற்றிய சேவைகளை தலைமுறை தலைமுறையாக  நாம் கொண்டு செல்ல வேண்டும்.

இளைய தலைமுறை நம்முடைய தேசத்தலைவர்கள் ஆற்றிய சேவைகளை, அர்ப்பணிப்புகளை தேசத்திற்கு ஆற்றிய கடமைகளை நினைவுகொள்ள வேண்டும். இங்கே அமர்ந்திருக்கக் கூடியவர்கள் சனாதன தர்மத்தை உலகறியச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நாம் இப்போது அந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

இந்த தேசம் எழுச்சி பெற்று வருகிறது. நாடு தன்னுடைய சுய பலத்தை தற்போது உணர்ந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட பெரும் தொற்று காலத்தில் இந்தியா தன்னுடைய தேவையான பணிகளை மட்டும் செய்யாமல் உலகில் கொடுத்தது கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளது. இன்று நாம் சந்திக்கக் கூடிய முக்கியமான பிரச்சனையை  பருவநிலை மாற்றம், நாட்டில் உள்ள பழங்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு 400 கோடியாக இருந்த இளம் தொழில் முனைவோர்கள் தற்போது 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கில் வளர்ச்சி நோக்கமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் ஒவ்வொரு நல்ல திட்டங்கள் நடவடிக்கைகள் சிலரால் தவறாக கொண்டுசெல்லப்படுகிறது.

இளைஞர்களுக்காக வெளிப்படைத் தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாகும். இந்தத் திட்டத்தில் நான்கு வருடம் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது இதன் மூலமாக ஒரு சிறுவன் இளைஞன் ஆக உருவாக்கப்படும், நாட்டுப்பற்று உருவாகும், இளைஞர்களிடம் தன்னம்பிக்கை,நல்ல ஒழுக்கம்  உருவாகும்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுய தொழில் தொடங்கும் வகையில் பொருளாதார ரீதியாக அந்த இளைஞன் உயர்வார்  என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்ற வருத்தத்தை அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் வளர்ச்சியில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் 2047 ஆம் ஆண்டில் இந்த திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும். எனவே அக்னிபாத் திட்டம் குறித்து புரிதல் அனைவருக்கும் அவசியம் என்று அவர் கூறினார்.

விழாவில் பத்மஸ்ரீ தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத் தலைவர் சுவாமி விமூர்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர துணைத்தலைவர் சகோதரி நிவேதிதா, மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 370

0

0