உண்மையில் சென்னை மக்கள் பாவம்… திமுக தலைகுனிய வேண்டும் ; மக்களின் அமைதி புரட்சி 2024 தேர்தலில் எதிரொலிக்கும் ; பாஜக!

Author: Babu Lakshmanan
4 December 2023, 2:21 pm
Quick Share

சென்னை ; கனமழையால் சென்னை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆட்சியின் போது விமர்சித்த தற்போதைய ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- நேற்றிலிருந்து பெய்து வரும் மழையினை எதிர்கொண்டு சமாளிப்பது மிக கடினமான காரியமே. இயற்கையின் சீற்றத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. ஆனால், இன்று ஆளும் கட்சியில் இருப்பவர்கள், கடந்த காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்று எண்ணிப் பார்ப்பதோடு, தங்களின் பதிவுகளை திரும்பி பார்த்து வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும். உண்மையிலேயே, மனசாட்சி இருந்தால் அன்றைய தவறான தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்பவர்கள் மனிதர்கள்.

கடந்த இரண்டரை வருடங்களில், சென்னையில், மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்க தோண்டிய சாலைகளை, தெருக்களை சீரமைக்காமல் பள்ளங்கள்,குழிகளோடு கைவிடப்பட்ட சாலைகளால், தெருக்களால் தான் இன்றைய சீர்கேடு என்பதை அரசு உணர வேண்டும். ஒரு அரசு பொறுப்பேற்று இன்று வரை சாலைகள் அமைக்கப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மழைநீர் வடிகால்வாய்கள் பல தெருக்களில் சாலைகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன என்பது அவலநிலை.

இனியாவது சென்னையில் சாலைகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும் அரசு. இல்லையேல், மக்களின் அமைதி புரட்சியினை 2024 பாராளுமன்ற தேர்தலில் காண்பார்கள். உண்மையில் பரிதாபதற்குரியவர்கள் சென்னை மாநகர மக்கள், என தெரிவித்துள்ளார்.

Views: - 207

0

1