‘முதலமைச்சர் தூங்கமாட்டார்’…. நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும் : தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 10:36 am
Quick Share

சென்னையில் கடந்த 2ம் தேதி முதல் 3 தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்களை இழந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தாலும், குறிப்பாக, வேளச்சேரி, தாம்பரம் மற்றும் ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் இன்னமும் தத்தளித்து வருகின்றன. இதனால், பால், உணவு மற்றும் மின்சாரம் என பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

அதேபோல, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- முதல்வர் தூங்கமாட்டார்: முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அவர் துடிப்பையும் துயரத்தையும் புரிந்து கொண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் களப் பணியாளர்களும் படையாக இணைந்தார்கள்; குடையாக நனைந்தார்கள் அவர்களின் நற்றொண்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியது, மழை ஓய்ந்த பிறகும், அவர்கள் ஓய்ந்தாரில்லை, இயற்கை ஒரேநாளில் சவால் விடுகிறது மனிதன்தான் பலநாள் போராடுகிறான்,

இறுதி வெற்றி மனிதனுக்குத்தான் திறமையோடும் தீவிரத்தோடும், அரும்பணி ஆற்றுவோரைப் பாராட்டுகிறோம், விமர்சனங்களை விடுங்கள், இது மீட்சிக்கு ஓர் ஆட்சி என்று நடுநிலையாளர் நற்சான்று தருவர், முதலமைச்சர் தூங்கமாட்டார், நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும், என பதிவிட்டுள்ளார்.

Views: - 165

0

0