பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி ; விசாரணையில் அம்பலமான உண்மை…!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 8:56 pm
Quick Share

சென்னை : சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த செந்தில்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். தற்போது எக்மோர் கெங்கு சாலையில் வசித்து வந்துள்ளார்.

ஆயுதப்படை காவலரான செந்தில்குமார் இன்று வழக்கம் போல, தனக்கு ஒதுக்கப்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்க பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். கடந்த 13 ஆம் தேதி முதல் முக்கிய விஐபிகள் வரும் பகுதியில் பாதுகாப்பு பணியில் செந்தில்குமார் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணி அளவில் அங்கு உள்ள கழிவறைக்குள் சென்று உள் பக்கம் தாழ்ப்பாலிட்டு, தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரைபில் ரக துப்பாக்கியால் வலது தோள்பட்டைக்கு மேல் கழுத்திற்கு கீழ் பகுதியில் சுட்டுக் கொண்டுள்ளார். மேலும், கதவை திறந்து வெளியே ரத்த வெள்ளத்தில் வந்து விழுந்த செந்தில்குமார், மீண்டும் தன்னைத் தானே இரண்டாவது முறை துப்பாக்கியால் சுட முயற்சி செய்தபோது, அங்கு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியை பிடுங்கி உள்ளார்.

பின்னர், சக காவலர்கள் மற்றும் பணியாளர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு ஆயுதப்படை துணை ஆணையர் சௌந்தரராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். செந்தில்குமார் பயன்படுத்திய துப்பாக்கியை பரிசோதித்த போலீசார் அவர் ஒருமுறை மட்டும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளது கண்டுபிடித்தனர். மீதமுள்ள ஐந்து குண்டுகளை துப்பாக்கியிலிருந்து மீட்டனர்.

சம்பவம் தொடர்பாக மதுரையில் உள்ள செந்தில்குமார், பெற்றோர் மற்றும் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரிய மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில். மரணமடைந்த காவலர் செந்தில்குமாருக்கும் அவரது மனைவி உமாதேவிக்கும் அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருவரிடமும் சமாதானமாக பேசி ஒன்று சேர்த்து வைத்தனர். அமைதியாக வாழ்ந்த இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் உமாதேவி செந்திலைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் இன்று பணி நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, செந்தில்குமார் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கலாமா ? என்கிற அடிப்படையிலையும் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 557

0

0