4 நாள் பயணமாக நாளை துபாய் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… உலகக் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைக்கிறார்..!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 10:18 pm
Quick Share

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ நாளை மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய்‌ மற்றும்‌ அபுதாபி செல்கிறார்‌.

உலகக்‌ கண்காட்சிகள்‌, மிகப்‌ பழமையான மற்றும்‌ மிகப்‌ பெரிய சர்வதேச நிகழ்வுகளில்‌ ஒன்றாகும்‌. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்‌ இந்த நிகழ்வானது, ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும்‌. துபாயில்‌ நடைபெற்று வரும்‌ எக்ஸ்போ கண்காட்சி,
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும்‌ தெற்காசிய பிராந்தியத்தில்‌ நடத்தப்படும்‌ முதல்‌ உலக கண்காட்சி. இந்த உலகக்‌ கண்காட்சி, துபாய்‌ நாட்டில்‌, அக்டோபர்‌ 1, 2021 முதல்‌ தொடங்கி மார்ச்‌ 31, 2022 வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்‌ கண்காட்சியில்‌, தமிழ்நாடு அரங்கில்‌, மார்ச்‌ 25, 2022 முதல்‌ மார்ச்‌ 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, உலகக்‌ கண்காட்சியில்‌, தமிழ்நாடு அரங்கினை மார்ச்‌ மாதம்‌ 25ஆம்‌ தேதி அன்று திறந்து வைக்கிறார்கள்‌. தொழில்‌ துறை, மருத்துவம்‌, சுற்றுலா, கலை, கலாச்சாரம்‌, கைத்தறி, கைவினைப்‌ பொருட்கள்‌, ஜவுளி, தமிழ்‌ வளர்ச்சி, தகவல்‌, மின்னணுவியல்‌, தொழிற்‌ பூங்காக்கள்‌, உணவுப்‌ பதப்படுத்துதல்‌ போன்ற முக்கிய துறைகளில்‌ தமிழ்நாட்டின்‌ சிறப்பை உலகிற்கு எடூத்துக்காட்டும்‌ வண்ணம்‌ காட்சிப்படங்கள்‌ இந்த அரங்கில்‌ தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.

தமிழ்நாட்டில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ பல்வேறு மோட்டார்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ அதன்‌ உதிரிபாகங்கள்‌, மின்சார வாகனங்கள்‌ மற்றும்‌ மின்னணுவியல்‌ சாதனங்கள்‌, காற்றாலைகள்‌ உட்பட பல்வேறு துறைகளில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ பொருட்களின்‌ உருவகங்களும்‌ இந்த அரங்கில்‌ காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுருங்கக்‌ கூறினால்‌, இந்த அரங்கிற்கு வருகை புரியும்‌ அனைவரும்‌, தமிழ்நாட்டின்‌ அனைத்து சிறப்புகளையும்‌ ஒரே இடத்தில்‌ பார்வையிடும்‌ அளவிற்கு, இந்த அரங்கம்‌ சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக்‌ கண்காட்சியில்‌, இந்தியா உட்பட 192 நாடுகள்‌ பங்கேற்றுள்ளன. இதில்‌, பங்கேற்றிடும்‌ ஒவ்வொரு நாட்டிற்கும்‌, பிரத்யேகமாக அரங்குகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாபெரும்‌ கண்காட்சியை சுமார்‌ 2.50 கோடி நபர்கள்‌ பார்வையிடுவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ இந்த துபாய்‌ மற்றும்‌ அபுதாபி பயணத்தின்‌ போது தமிழ்நாட்டிற்கு மேலும்‌ முதலீடுகளை ஈர்க்கும்‌ பொருட்டு, பொருளாதாரம்‌, வெளிநாட்டு வர்த்தகம்‌ போன்ற முக்கிய துறைகளின்‌ அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில்‌ உள்ள முன்னணி வணிக மற்றும்‌ தொழில்‌ நிறுவனங்களின்‌ தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும்‌ தொழில்‌ சங்கங்களின்‌ தலைவர்கருடனான சந்திப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, புலம்பெயர்‌ தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாண்புமிகு தொழில்‌ துறை அமைச்சர்‌, தொழில்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌, வழிகாட்டி நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ ஆகியோர்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையிலான குழுவில்‌ அங்கம்‌ வகிப்பார்கள்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 714

0

0