பேருந்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி… ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட போக்குவரத்து ஊழியர்கள்!!

Author: Babu Lakshmanan
16 June 2022, 9:54 am
Quick Share

கோவை : கோவையில் காவல் நிலையத்தை தொமுச போக்குவரத்துக்கழக அமைப்பினர் உள்பட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை சித்ராவிலிருந்து வெள்ளலூர் நோக்கி செல்லும் S19 TN 38 N 3179 என்ற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டி வருபவர் அஸ்வந்த்குமார். இவர் நேற்று வழக்கம் போல பணி செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, கோவை டவுன்ஹால் ராயல் தியேட்டர் சிக்னலில் நிறுத்தியுள்ளார். அதன் பின்பே சிக்னல் விடப்பட்டதும், பேருந்தை வழக்கம்போல இயக்கியுள்ளார்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் திடீரென சறுக்கி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் விழுந்துள்ளனர். இதனால், பேருந்தின் பம்பர் இழுத்துக் கொண்டு சென்றுள்ளது. இதில், இந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த புஷ்பராணி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அந்த வாகனத்தை ஓட்டிவந்த மோகன் ராஜ் என்பவர் பலத்த காயத்துடன் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இது சம்மந்தமாக கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு மேற்கு காவல் நிலைய போலீசார் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த வசந்த் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மோகன்ராஜ் என்பதும், அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அதில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் புஷ்பராணி அவர் பேரூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், வேலை நிமித்தமாக வந்து விட்டு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்பட அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தொழில் அமைப்பினர் தங்களிடம் சிசிடிவி காட்சிகள் உள்ளது. பிறகு எதன் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் அந்த சிசிடிவி காட்சிகளை காண்பித்து அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தான் தவறுதலாக சறுக்கி பேருந்து முன் சக்கரத்தின் மீது விழுந்துள்ளனர். இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நாளை (இன்று) காலை சம்பவ இடத்தில் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து கழக தொழில் அமைப்பினர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 436

0

0