கொரோனா விதி மீறல் : தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்…

Author: kavin kumar
29 January 2022, 11:11 pm
Quick Share

கரூர் : கரூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை பணிபுரிய அனுமதி வழங்கிய தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர் – கோவை சாலையில் செயல்படும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ரெடிமேட் நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் விடுப்பில் சென்றார். அவரைத் தொடர்ந்து நிறுவனத்தின் காசாளருக்கு மேற்கொண்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி லட்சியவர்ணா சம்பந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணியாற்றியவர்கள் விவரம் குறித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசி தகவல்களை அளிக்க மறுத்தனர்.

பணியாளர் பதிவேட்டில் தொற்று பாதித்த நபர் இன்று நிறுவனத்திற்கு வருகை புரிந்தது உறுதியானது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இதுதொடர்பாக நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். இதன் பிறகே தனியார் நிறுவன ஊழியர்கள் வேறுவழியின்றி அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தனர். அதனடிப்படையில் இந்த நிறுவனத்தில் 49 பேர் பணியாற்றி வருவதும், தொற்றால் பாதிக்கப்பட்டவர் இன்று நிறுவனத்திற்கு வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடை இழுத்து மூடப்பட்டு நிறுவனத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கடையின் முன்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே நிறுவனத்தை திறக்க வேண்டும். அதுவரை நிறுவனம் பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தார். தொற்று இருப்பது தெரிந்தும் பிரபல நிறுவனத்தைத் திறந்து செயலாற்றிய விவகாரம் கரூர் மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 794

0

0