கோவையில் பிரபல தனியார் மருத்துவமனை சூறையாடப்பட்ட வழக்கு : கேரளாவில் பதுங்கியிருந்தவரை கைது செய்த சிபிசிஐடி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 11:07 am
CBCID Arrest -Updatenews360
Quick Share

கோவையில் தனியார் மருத்துவமனை சூறையாடிய வழக்கில் வக்கீலின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை – காந்திபுரம், நூறடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன், 75 என்பவர் உள்ளார். இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் வாடகைக்கு எடுத்தார்.

இதனால் இம் மருத்துவ மனையின் பெயர் சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2017ம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தி, மருத்துவமனையை சூறையாடி சென்றது.

இதுதொடர்பாக போலீசார் – டாக்டர் உமாசங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் வாடகை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், மருத்துவமனையை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் உமாசங்கர் – மருதவான் ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின் ஜாமீனில் வெளியே வந்த உமாசங்கர் விபத்தில் பலியானார். இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமச்சந்தின் உள்பட 13 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர்.

ராஜேந்திரனிடம் மேலாளராக பணிபுரிந்த பிரபு, என்பவர் கேரளா, கொச்சியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொச்சி சென்று, பிரபுவை கைது செய்து விசாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 501

0

0