உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 4:28 pm
Cm Letter - Updatenews360
Quick Share

உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.

அவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை.

உக்ரைன் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது. இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் இரண்டாயிரம் பேர் ரஷியாவுடனான போரின் காரணமாக தமிழகத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் தங்களது இந்தியாவிலோ, அல்லது வெளிநாட்டிலோ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 488

0

0