இந்த மாதிரி சமயத்துல நெல்லிக்காய் ஜூஸ் குடிக்காதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
15 June 2023, 10:19 am
Quick Share

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்போம். நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி இருக்கும் காரணத்தால் அது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நிச்சயமாக நமது ஆரோக்கியத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒரு சில சமயங்களில் அது நமக்கு தீங்கு விளைவிக்க கூடும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். எந்தெந்த மாதிரியான சமயத்தில் நெல்லிக்காய் சாறு அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கல்லீரல் சார்ந்த நோய்கள் இருக்கும் நபர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் அதிக அளவு அமிலத்தன்மை கல்லீரல் சேதத்தை இன்னும் மோசமாக்கி வலியை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு கல்லீரல் சார்ந்த நோய்கள் இருந்தால் நீங்கள் நெல்லிக்காய் சாறு குடிக்கலாமா என்பதை மருத்துவரிடம் கேட்டுக் கொண்ட பிறகே அதனை குடிக்க வேண்டும்.

நெல்லிக்காய் சாறு ஒரு சில நேரங்களில் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். டையூரிடிக் பண்புகள் நிறைந்த நெல்லிக்காயில் பயோ ஆக்டிவ் பொருட்களும் காணப்படுகிறது. இது ஏற்கனவே சேதமடைந்த சிறுநீரகத்தில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை மேலும் பாதிக்கலாம். எனவே உங்களுக்கு கடுமையான சிறுநீரக நோய்கள் ஏதேனும் இருந்தால் நெல்லிக்காய் சாறு குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.

உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நபர்களுக்கு நெல்லிக்காய் பல நன்மைகளை அள்ளித்தரும், அதே வேளையில் இது குறைந்த இரத்த அழுத்தம் கொண்ட நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் நெல்லிக்காயில் காணப்படுவதால் குறைந்த இரத்த அழுத்தம் கொண்டிருக்கக்கூடிய நபர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தின் போது நெல்லிக்காய் சாறு குடிப்பது பல பிரச்சனைகளை உண்டாக்கலாம். இது அசிடிட்டி பிரச்சனை மற்றும் புளித்த ஏப்பம் போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் இதனால் வயிற்று உப்புசமும் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல் நெல்லிக்காயில் டையூரிடிக் பண்புகள் அதிகம் காணப்படுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இது நீர்ச்சத்து இழப்பை உண்டாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு இது நல்லதல்ல. ஆகவே கர்ப்பமாக இருக்கும் பொழுது நெல்லிக்காய் சாறு எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 229

0

0