குறைவான விலையில், திகட்ட திகட்ட சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் வெண்பூசணி!!!

Author: Hemalatha Ramkumar
24 May 2023, 1:43 pm
Quick Share

விலை மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய வெள்ளை பூசணிக்காயில் அதிகப்படியான வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், தியமின் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களையும் கொண்டுள்ளது. இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது. மேலும் இதில் குறிப்பிட்ட அளவு புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவையும் அடங்கியுள்ளன. பூசணிக்காயில் அதிகப்படியான நீர் சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்படிப்பட்ட இந்த பூசணிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றின் ஒரு சில பயன்களை இங்கே காண்போம்.

அதிகப்படியான உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பூசணிக்காயை அதிகமாக உண்ணலாம். வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வரும் பொழுது இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்துக்கள், நமது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க மிகவும் உதவி புரிகிறது. இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீர் நீர் வெளியேற்றப்படுகிறது.

வெள்ளைப் பூசணிச் சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது நமது உடலில் உள்ள சூடு குறைக்கப்படுகிறது. உடல் சூட்டினால் உண்டாகக்கூடிய மூலநோய், மலச்சிக்கல், கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்துகிறது. குடலில் இருக்கக்கூடிய நாடா புழுக்களை கழிவுகளின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

அல்சர் (குடல் புண்) பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படக்கூடிய அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யவும் பூசணிக்காய் சாறு உதவுகிறது.

பூசணிக்காய் சாறு இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அழித்து இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது. நுரையீரலில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகள், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, அதிகப்படியான தாகம் மற்றும் வாந்தி ஆகியவற்றை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நமது உடலில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் கண் பார்வை தெளிவாக இருப்பதற்கும் உதவி செய்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 299

0

0