நீட் தற்கொலைகளை மறைக்க கள்ளக்குறிச்சி கலவரம்… திமுகவின் திட்டமிட்ட சதியா…? பகீர் கிளப்பும் அதிமுக..!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 1:16 pm
Quick Share

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் திமுகவின் திட்டமிட்ட சதியா..? என்ற அதிமுக சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்தே ஆவோம் என்று வாக்குறுதி அளித்து அரியணை ஏறிய திமுகவின் ஆட்சியில், 2வது முறையாக கடந்த 17ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு முன்னதாக, 10 நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த சூழலில், கடந்த 17ம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற தினத்தன்று, கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டது. போலீஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. அதிமுக, பாஜக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் பேசியதாவது :- சமீபத்தில் நீட்தேர்வு முடிந்துள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் 8 மாணவர்கள் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீர்த்தேவை ஒழிப்போம் என கூறினர். ஆனால் இந்தாண்டு நீட்தேர்வு நடந்துவிட்டது. அதை எவரும் கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி அது தொடர்பான மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது.

நீட் மரணங்களை திசை திருப்பவும், மறைப்பதற்காகவும் கள்ளக்குறிச்சி கலவரத்தை திட்டமிட்டு திமுக நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. இப்போது அனைவரும் கள்ளக்குறிச்சி விஷயத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் அமைதியாக நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அது மட்டுமின்றி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் இப்போது ஓடிஓடி கைது செய்கிறார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக காவல்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கலவரத்தை அடக்கிவிட்டது என இவர்களே பாராட்டி பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் மறுநாளே மாவட்ட ஆட்சியர் முதல் எஸ்பிவரை இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது. அவரது வீட்டை அளவீடு செய்து வருகிறார்கள். அவரின் முன்னோர்கள் கட்டிய வீட்டை எதற்காக அளவீடு செய்கிறார்கள்? குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் கொடுத்தது எதற்காக..? அனைவரும் இதைப் பற்றியே பேச வேண்டும். மற்ற தவறுகளை மறந்து விட வேண்டும் என்பதற்காகத்தான். திமுக அரசு தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் ஒரு செய்தியை மறைக்க இன்னொரு செய்தியை கிளப்பி விடுவது தான் திமுகவின் வேற, எனக் கூறினார்.

Views: - 471

0

0