‘கோடநாடு பங்களாவில் எவ்வளவு பணம், நகைகள் இருந்தன?’…இறந்து போன தினேஷை உங்களுக்கு தெரியுமா?: சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை..!!

Author: Rajesh
21 April 2022, 3:38 pm
Quick Share

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கின் விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெயா தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாரயணன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து எஸ்டேட் குறித்த தகவல்களை அறிந்தவர் என்பதால் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி சென்னை தியாகராயா நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன ஆவணங்கள், பணம், நகைகள் இருந்தன என்பது பற்றி சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் எப்போது யார் மூலம் உங்களுக்கு தெரியவந்தது?

கோடநாடு பங்களாவில் என்ன ஆவணங்கள், எவ்வளவு பணம், நகைகள் இருந்தன?

கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன?

கோடநாடு பங்களாவில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர்? யார் மூலம் வேலையாட்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்?

பங்களா மேலாளர் நடராஜனுக்கு என்னென்ன பணிகள் கொடுக்கப்பட்டிருந்தன?

கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு பங்களா மேலாளர் நடராஜனை தொடர்பு கொண்டீர்கள்?

கடைசியாக கோடநாடு பங்களாவிற்கு எப்போது சென்றீர்கள்? உங்களுக்கு யார் யார் மீது சந்தேகம் உள்ளது?

சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ், தற்கொலை செய்துகொண்ட தினேஷ் குமார் குறித்தும் சசிகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

Views: - 657

1

0