எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவர் EPS… சசிகலாவால் அடையாளம் காணப்பட்டவர் OPS.. அதிமுகவினர் முழக்கம்..!!

Author: Babu Lakshmanan
22 June 2022, 2:15 pm
Quick Share

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க வலியுறுத்தி மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு பெருகி வருகிறது.

தற்போது வரை மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 65க்கும் மேற்பட்டோரின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், ஓபிஎஸ்க்கு இருந்த ஆதரவு 11ல் இருந்து 6ஆக குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ்-க்கு எதிராகவும், இபிஎஸ்க்கு ஆதரவாகவும் ஆலந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜீவா தலைமையில், தொண்டர்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து மாலை அணிவித்து கோஷம் எழுப்பினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அதிமுக தொண்டர் ஆலந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜீவா கூறியதாவது :- அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றை தலைமை அனைத்து தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளதால், ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தலைமை தாங்க அறிவிக்க வேண்டும். இதற்கு ஓபிஎஸ் வழிவிட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். ஓபிஎஸ் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்கின்றனர். அவர்தான் அதிமுகவிற்கு சரியான தலைமை என கருதுகிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு வழிவிட வேண்டும், என்றார்.

Views: - 412

1

0