தனித்து போட்டியிட அதிமுக தயார்… திமுக உள்பட மற்ற கட்சிகள் தயாரா..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 2:46 pm
Quick Share

மதுரை : தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் என்றும், பிற கட்சிகள் தயாரா என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- மதுரை மாநகராட்சி ஆணையர் மிக வேகமாக செயல்பட வேண்டும். மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. மாநகராட்சி வருவாயை அதிகப்படுத்த ஆணையர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீட்டுவசதி வாரியத்தில் இருந்து மாநகராட்சிக்கு நிறைய வருவாய் வர வேண்டி உள்ளது. ஏறத்தாழ 300 கோடி அளவிற்கு வருவாய் வர வேண்டி உள்ளது.

வீட்டுவசதி வாரிய வருவாயை பெறுவதற்கு ஆணையர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதிக்குள் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தெப்பகுளத்தில் லேசர் ஒளி – ஒலி காட்சிகள் நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுரையில் 13 இடங்களில் சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மதுரையில் மேயருக்கு இணையாக சூப்பர் மேயரை திமுக நியமனம் செய்துள்ளது. (மேயரின் தனி ஆலோசகர் அர்ச்சனா நியமனத்தை சூட்டி காட்டி பேச்சு), மேயருக்கு இணையாக ஒருவரை நியமிக்க சட்டரீதியாக இடம் இல்லை. நல்ல மேயர் தேர்வு செய்யப்பட்டால் மேயருக்கு ஆலோசகர் தேவையில்லை. ஆலோசனை சொல்ல மாநாகராட்சி மாமன்ற உறுப்பினர் உள்ளனர். கழிவு நீர் தேங்கினால் அகற்ற உரிய கருவிகள் மாநகராட்சியிடம் இல்லை. உரிய உபகரணங்களை மாநகராட்சி வாங்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அமைச்சர் ஐ.பெரியசாமி முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என பேசுகிறார். திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பிரதமர் சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்துகள் முறையாக இயக்கவில்லை.

மத்திய அரசிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அண்ணாமலை கூறி வருகிறார். திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெறுகிறது. தமிழகத்தில் மக்கள் பணியை அதிமுக செய்கிறது. அதிமுக சட்டமன்றத்தில் பேசுவதை சபாநாயகர் எடிட் செய்து வெளியே விடுவார். அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கட்சி வளர்ச்சிக்காக பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள கூடாது.

பொன்னையன் கருத்து அவருடைய பார்வையில் சொல்லபட்டவை. திமுக வாக்குறுதிகளை நம்பி மக்கள் எமாற்றம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி. அதிமுக காக்கா கூட்டம் அல்ல, கொள்கை கூட்டம். அதிமுக தனித்து போட்டியிட தயாராக உள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால் அதிமுக தனித்து நிற்க தயாராக உள்ளது.

என்னுடைய கருத்தை எடப்பாடி, ஒ.பி.எஸ் ஏற்றுக் கொள்வார்கள். அண்ணாமலை தமிழகத்தில் அரசியல் செய்கிறார். முருகன் வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா. அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால் நாங்கள் தூணை கொண்டு ஏறிவோம்” என பேசினார்.

Views: - 644

0

0