கருணாநிதிக்கான மெரினா பேனா நினைவு சின்னம்… ஊழலுக்காக உருவாக்கப்பட்ட திட்டமா…? முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் சந்தேகம்..!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 4:06 pm
Quick Share

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது ஊழலுக்காக உருவாக்கப்பட்ட திட்டமோ என்று எண்ணத் தோன்றுகின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும், அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது :- திமுக எந்த ஒரு திட்டத்தையும் கடந்த 15 மாதங்களில் செயல்படுத்தவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த குண்டாறு இணைப்பு திட்டம் மத்திய அரசின் அனுமதி வழங்கியும் திமுக அரசு கிடப்பில் போட்டு உள்ளது.

மின் கட்டண உயர்வு அடித்தட்ட மக்களை மிகவும் பாதித்து இருக்கிறது. மின் துண்டிப்புக்கு அணிலை காரணம் காட்டிய அமைச்சர், மின்சார கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம் காட்டுகிறார். அனைத்து துறையிலும் ஊழல் நடக்கிறது. மின்சாரத் துறையில் நடந்த ஊழல் காரணமாகவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு கலைஞர் அவர்களின் பேனா சிலை அமைப்பதற்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது மக்களிடம் வெந்த புண்ணில் வெலை பாய்ச்சுவது போல் உள்ளது. கலைஞரின் நினைவாக பேனா அமைக்கும் திட்டம் ஊழலுக்காக உருவாக்கப்பட்ட திட்டம். கலைஞர் பெயரின் நூலகம் அமைப்பது முதல் பேனா அமைப்பது வரை ஆயிரம் கோடி திமுக அரசு செலவு செய்து விட்டது. ஆயிரம் கோடி செலவழித்து கலைஞரின் புகழை நிலை நிறுத்த வேண்டுமா..? அவ்வாறு செய்தால் அது நிரந்தரமான புகழா..?, எனக் கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் தனியாக நிர்வாகிகளை அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுக இன்னும் வலுவடைய வேண்டும். வழி தெரியாமல் சென்றவர்கள் இங்கு வந்து சேர்ந்து விடுவார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் இணைந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதிமுகவின் ஒற்றைத் தலைமையின் பலம் டெல்லி வரை தெரிந்து உள்ளது, என தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது அவருடைய கடமை மற்றும் உரிமை என நினைக்கின்றேன். எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்த ஒன்றை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவிற்கு மட்டுமே. அதில் எந்த அரசியலும் கிடையாது. ஒரு இந்தியா அதிகளவு தொண்டர்களை வைத்துள்ள தோழமை கட்சி தலைவரை பார்க்க, சென்னை வரும் பிரதமர் மோடி தோழமைக் கட்சி தலைவர் என்ற முறையில் இ.பி.எஸ் யை சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்கும், என நம்புவதாகவும் கூறினார்.

பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஜக எங்களின் தோழமைக் கட்சி அவர்கள் செயல்பாடு நன்றாகவே உள்ளது. தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே, அதைப்பற்றி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் வளர்ச்சியை அவரவர்கள் செய்து கொண்டுள்ளார்கள். பாஜகவின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிமுகவை பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா இருந்த போது, எப்படி தனித்து நின்று 136 இடங்களை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்களோ, அந்த அளவுக்கு எங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என செயல்பட்டு வருகிறோம், எனக் கூறினார்.

Views: - 372

0

0