வாக்கு எண்ணிக்கையின் போது கலவரத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம் : கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2022, 1:18 pm
Senthil Balaji -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காளப்பட்டி சுகுணா திருமண மண்டபத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

Image

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை வாக்கு எண்ணிக்கையை சீர் குலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். வன்முறையை தூண்டி கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். நாளை எந்த விதமான வன்முறை நடந்தாலும் பொறுமையுடன் செயல்பட கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம்.

Image


வன்முறை நடந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.

செல்போன்களை வெளியில் வைத்துவிட்டு வரச்சொல்லி இருக்கின்றனர். கூட்டம் நடந்த மண்டபத்தின் கதவுகளை அடைத்து விட்டு பக்கத்தில் கட்சிக்காரர்கள்தான் இருக்கின்றார்களா? என பார்த்துக்கொண்டு பேசி இருக்கின்றனர்.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அதிமுகவினர் 100 பேர் வர வேண்டும் என பேசி உள்ளனர். ஆயிரக்கணக்கில் அதிமுக-வினரை வரவழைத்து வன்முறையை கட்டவிழத்து விட திட்டமிட்டு இருக்கின்றனர். சிறு, சிறு சம்பவங்கள் கூட இல்லாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற வேண்டும்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு சாவடிகளுக்குள் எப்படி சென்றார்கள்? அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என்று தெரியவில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்றது குறித்து திமுக சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார் .

இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்பி நாகராஜ், காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஎம் இராமமூர்த்தி, சிபிஐ சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், மனிதநேய மக்கள் கட்சி ஜெம் பாபு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 553

0

0