மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு : கணவருடன் சண்டையால் கோபத்தில் வீசிச் சென்றதாக கொடூரத் தாய் விளக்கம்!!

Author: kavin kumar
27 January 2022, 6:47 pm
Quick Share

திருச்சி : திருச்சி அருகே மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை கணவர் திட்டியதால் கோபத்தில் போட்டு விட்டு சென்றதாக போலீசில் அந்த குழந்தையின் தாய் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறைஅரசுதலைமை மருத்துவமனையில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு கட்டிடத்தின் பின்புறத்திலிருந்து கைக்குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே கட்டுமான பணியாளர்கள் கீழே இறங்கி வந்து பார்த்தபோது தரையில் ஒரு துண்டின் மேல் பெண் குழந்தை ஒன்றுபடுக்க வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கட்டிட தொழிலாளிகள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தீவிர சிசு சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர்.அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த பெண் குழந்தை பிறந்து சில நாட்களே ஆவதாகவும் மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசாருக்கு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனை கட்டிடத்தில் அருகே பெண் குழந்தையை விட்டுச்சென்ற தாய் யார்? எனவும், தவறான வழியில் பிறந்த குழந்தையா ? அல்லது பெண் குழந்தை என்பதால் விட்டு சென்று விட்டனரா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மணப்பாறை அடுத்துள்ள அம்மாசத்திரம் புதூர் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்பவரது மனைவி தனலட்சுமி மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்து மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தை தனது குழந்தை தான் என கூறினார். இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 18ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் தனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் கணவர் திட்டியதால் குழந்தையை எடுத்து வந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் போட்டு விட்டுச் சென்றதாக தெரிவித்தார். மேலும் மனசாட்சி உறுத்தியதால் தற்போது இங்கு வந்ததாகவும் கண்ணீருடன் கூறினார். குழந்தை திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு நல குழுவில் ஒப்படைக்கப்பட்டதால் அங்கு செல்லுமாறு கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Views: - 590

0

0