‘நாங்க எங்கேயும் போகமாட்டோம்…நாட்டுக்காக போராடுவோம்’: களத்தில் இறங்கிய உக்ரைன் அதிபர் வெளியிட்ட வீடியோ..!!

Author: Rajesh
26 February 2022, 12:31 pm
Quick Share

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக தொடரும் நிலையில், ரஷ்யா ராணுவத்திடம் உக்ரைன் சரணடைய போவதாக வெளியான செய்திக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பதில் அளித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் பீரங்கி உள்ளிட்டவை பயன்படுத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்திருந்தது.

2 நாட்களைக் கடந்து போர் தொடரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அண்டை நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் ராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை அளித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்றிரவு கீவ் நகரின் மத்திய பகுதியில் இருந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய ராணுவ அதிகாரிகள் உடன் இணைந்து ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராகத் தலைநகரைப் பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி, “நாங்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவமும் இங்கே தான் உள்ளது. மக்களும் இங்கே இருக்கிறார்கள். எங்கள் நாட்டையும் எங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க நாங்கள் அனைவரும் இங்குப் போராடுகிறோம். போர் எத்தனை காலம் தொடர்ந்தாலும் இது மாறாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா ராணுவத்திடம் நாங்கள் சரணடைய போவதாக பொய்யாக செய்தி பரவி வருகிறது. நாங்கள் சரணடைய மாட்டோம். நாட்டிற்காகவும், நமது குழந்தைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என சொந்த நாட்டு மக்களுக்கு வீடியோ வெளியிட்டு நம்பிக்கை கொடுத்துள்ளார் உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி.

Views: - 1388

0

0