ஏம்பா குடிக்கற..இனி குடிக்காத பா : அறிவுரை கூறிய மகள்களை கொன்று சடலம் அருகே அமர்ந்து மது அருந்திய கொடூரத் தந்தை.. ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 9:47 pm
Kanchi Double Murder -Updatenews360
Quick Share

மதுகுடிக்காதே என தகப்பனிடம் கூறிய 2 பிள்ளைகளையும் தந்தையே கட்டையால் அடித்து கொன்ற கொடூரமான செயல் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகுகிறது. இந்த தம்பதிகளுக்கு நந்தினி (வயது 16) ,நதியா (வயது 14), தீனா வயது 11, தீபா (வயது 9) என்ற 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கோவிந்தராஜனின் மனைவி ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள குடோனில் குப்பை பிரிக்கும் வேலை செய்து வருகிறார். கோவிந்தராஜ் கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி அவ்வப்போது தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார் என கூறப்படுகிறது.

இதில் கோவிந்தராஜன் இரண்டாம் மகள் நதியா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு இறந்துவிட்டார். நதியா எப்படி இறந்தார் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஒரகடம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

மூத்த மகள் நந்தினி வாலாஜாபாத் மாசிலாமணி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வாரணாசி அருகே உள்ள தாழம்பட்டு அரசு பள்ளியில் தீனா 6 வது வகுப்பும், தீபா 4ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரகடம் டாஸ்மாக்கில் மது வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் மது அருந்திக் கொண்டிருந்த போது, பள்ளியிலிருந்து வந்த இரண்டு மகள்களும் யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு மது குடித்துக் கொண்டிருந்த தன் தந்தையிடம் ஏன் மது குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கின்றாய் என சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த கோவிந்தராஜ் அருகே இருந்த ரிப்பர் கட்டையை எடுத்து தன்னுடைய இரண்டு மகள்களையும் தலையிலும் மார்பிலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த நந்தினியும் தீபாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்கள். மகள்களை அடித்து கொன்று விட்டு வீட்டினுள் உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு மீதி மதுவை கோவிந்தராஜ் அருந்திக் கொண்டிருந்தார்.

மகன் தீனா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள் தாழ்ப்பாள் போட்டு உள்ள படியால் தனது பாட்டி அம்பிகாவையும் பக்கத்து வீட்டில் உள்ள கோபால் என்பவரையும் அழைத்து என்ன ஏது என கேட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து கதவை தட்டியபோது, கதவை திறந்துகொண்டு கோவிந்தராஜ் தப்பி ஓடி ஓரகடம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தகவலை அறிந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் நந்தினி மற்றும் தீபாவின் உடல்களை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கோவிந்தராஜிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

மதுவுக்கு அடிமையான கோவிந்தராஜ் தன் மகள்கள் என்றும் பாராமல் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மண்ணெண்ணெய் ஊற்றி இறந்துபோன நதியா என்ற மகளையும் கோவிந்தராஜ் தான் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகமும் அவருடைய உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Views: - 540

0

0