இன்னும் எத்தனை உயிர்பலி? தமிழகத்தில் தொடரும் சோகம் : ஆன்லைன் ரம்மியால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 8:47 pm
Online Rummy Suicide - Updatenews360
Quick Share

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி இயற்றியது. அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா, கடந்த அக்.19 ம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே, அவசர சட்டம் காலாவதியானதால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தங்கு தடையின்றி நடக்கத் தொடங்கி உள்ளன.

பொதுமக்களின் செல்போன்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் மற்றும் விளம்பரங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த அழைப்புகளில் உள்ள வாசகத்தை நம்பி அப்பாவி மக்கள் பணத்தை இழக்கத் தொடங்கி உள்ளனர்.

எனவே, ஆன்லைன் சூதாட்டங்களால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு உயிர் பறிபோய் உள்ளது.
சென்னை மணலி கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (வயது 36) தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக பணத்தை இழந்த நிலையில் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Views: - 357

0

0