துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்களை குவித்த AK… எத்தனை தங்கம், வெள்ளி தெரியுமா..?

Author: Babu Lakshmanan
30 July 2022, 10:43 am
Quick Share

திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்களை நடிகர் அஜித்குமார் குவித்துள்ளார்.

திருச்சி கேகே நகரில் உள்ள காவல்துறையினருக்கு சொந்தமான திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டிகள் ரைபில் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் கீழ் நடைபெறுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், கார் மற்றும் பைக் போட்டிகளில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்றார். அவர் 10மீ, 25 மீ மற்றும் 50மீ பிஸ்டல் பிரிவுகளில் கலந்து கொண்டார்.

இந்தப் போட்டிகளில் அவர் கலந்து கொள்வதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை நடிகர் அஜித் வென்றுள்ளார்.

இதில், நடிகர் அஜித்குமார் அணி, சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் என நான்கு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கம் என மொத்தமாக அவரது அணி 6 பதங்களை வென்றுள்ளனர். 

அதற்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அவரது அணியினரிடம் நேற்று வழங்கப்பட்டது என திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 603

0

0