பெண் காவலரிடம் குடிபோதையில் ரகளை… வழக்கறிஞர் உள்பட இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

Author: Babu Lakshmanan
20 June 2022, 4:48 pm
Quick Share

திருச்சி அருகே பெண்தலைமை காவலரிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் வக்கீல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் எல்லப்பன் (24). இவர் நேற்று மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு கைகாட்டி வழியாக சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதில் எல்லப்பனுக்கும், எதிரில் பைக்கில் வந்த பெண்ணுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் முசிரி காவல் நிலையத்திற்கு கைகாட்டியில் தகராறு நடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு முசிறி காவல் நிலையத்தில் இருந்த பெண் தலைமைக் காவலர் கவிதா மற்றும் போலீசார் வந்துள்ளனர்.

மது போதையில் இருந்த எல்லப்பனிடம் என்ன தகராறு என கேட்டு விசாரித்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த எல்லப்பனின், நண்பர் வக்கீல் கார்த்தி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பெண் தலைமை காவலர் கவிதாவிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், காவலர் கவிதா மீது இரு சக்கர வாகனத்தை மோதியதாக தெரிகிறது. இதில் கவிதாவின் காலில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீசார் எல்லப்பன், வக்கீல் கார்த்திக் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் எல்லப்பன், வக்கீல் கார்த்திக் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட வக்கீல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் முசிறியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 521

1

0