அந்த ஒரு ஓட்டு யாரோடது?….ரகசிய விசாரணையில் திமுக, மார்க்சிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 7:35 pm
DMK Marxist - Updatenews360
Quick Share

நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு பெற்ற அமோக வெற்றி எதிர்க்கட்சிகளை நிலைகுலையச் செய்துள்ளது என்பது அரசியலில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

அதற்கான காரணங்களை எளிதாக அடையாளம் காண முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருந்த சில கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பழங்குடியின பெண் முர்மு என்பதால் சமூகநீதி அடிப்படையில் அவருக்கு ஆதரவாக வாக்களித்தன.

முர்முவுக்கு விழுந்த எதிர்க்கட்சி ஓட்டுகள்

இது தவிர 17 எம்பிக்களும் 126 எம்எல்ஏக்களும், தங்களது கட்சியின் மேலிட உத்தரவை மீறும் விதத்தில் முர்முவுக்கு சாதகமாக ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அதேநேரம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில்15 எம்பிக்களும், 38 எம்எல்ஏக்களும் செல்லாத ஓட்டுகளை பதிவு செய்தும் உள்ளனர்.

இது தெரிந்தே செய்த ஒன்றா? அல்லது எதேச்சையாக நடந்ததா?…என்ற கேள்விதான் தற்போது தேசிய அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

செல்லாத போட்டவர் யார்?

அதுவும் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில் ஒருவர் செல்லாத வாக்கை பதிவு செய்திருக்கிறார். இப்படி செல்லாத ஓட்டு போட்டவர் யார்? என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

இதனடிப்படையில் பார்த்தால், குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இதே 159 ஓட்டுகள்தான் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவிற்கு பதிவாகி இருக்கவேண்டும். ஆனால் அவருக்கு கிடைத்தது, 158 வாக்குகள்தான். அதாவது ஒரு ஒட்டு குறைவாக விழுந்துள்ளது.

அதேநேரம் அதிமுக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் 75 எம்எல்ஏக்களும் முர்முவுக்கு அப்படியே வாக்களித்து இருப்பது தெரிகிறது.

திமுக கூட்டணி எம்எல்ஏவின் செல்லாத ஓட்டு

இதனால் திமுக கூட்டணியில், இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 9 கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களில் யாரோ ஒருவர்தான் தனது வாக்கை செல்லாத ஒன்றாக பதிவு செய்துள்ளார் என்பதை யூகிக்க முடிகிறது.

இது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், பாஜக எதிர்ப்பு என்கிற ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக கூறப்படும் திமுக கூட்டணியில் சமீபகாலமாக சில கட்சி தலைவர்கள் திமுகவை மறைமுகமாக விமர்சித்து வருவது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

பயந்து போன எம்எல்ஏ யார்?

அதிருப்தியில் உள்ள அந்த கட்சிகளில் யாராவது ஒருவர் செல்லாத ஓட்டு போட்டு இருக்கவும் வாய்ப்புள்ளது. முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்தால் அது சிக்கலாகிவிடும் என்று பயந்து செல்லாத ஓட்டாக அவர் பதிவு செய்திருக்கலாம்.

என்றபோதிலும், கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவுக்கு, இந்த செல்லாத ஓட்டு விவகாரம் பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக கூட்டணி ஒற்றுமையாக இல்லை என்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதை அக்கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது.

ரகசிய விசாரணையில் திமுக

தற்போது திமுக அரசின் முழு கவனமும் மகாபலிபுரத்தில் வரும் 28-ந் தேதி தொடங்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மீதே இருப்பதால், இந்த விஷயத்தை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்று கூற முடியாது.

இது பற்றிய ரகசிய விசாரணையை அறிவாலய வட்டாரங்கள் நடத்தி வருவதாகவும் பேசப்படுகிறது. அப்படி செல்லாத ஓட்டு போட்ட எம்எல்ஏ யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் அவருக்கு கூட்டணியில் கொடுக்கப்படும் மரியாதை குறைந்து போகும் வாய்ப்பும் உள்ளது.

கேரள எம்எல்ஏ கொடுத்த அதிர்ச்சி

தமிழகத்தில் செல்லாத ஓட்டு விவகாரம் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தி இருப்பதுபோல், மார்க்சிஸ்ட் ஆட்சி நடந்து வரும் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக ஒரு எம்எல்ஏ வாக்களித்து ஆளும் கட்சிக்கும், மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் கடும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஏனென்றால் அந்த மாநில சட்டப் பேரவையில் பாஜகவுக்கு எம்எல்ஏவே கிடையாது. மொத்தமுள்ள 140 எம்எல்ஏக்களில் 99 பேர் மார்க்சிஸ்ட் கூட்டணியைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 41 பேர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள்.

ஆளும் கட்சி கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர், முர்முவுக்கு ஆதரவாக ஓட்டு பதிவு செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்களோ எதிர்க் கட்சிகள் வேட்பாளரை அறிவித்த உடனேயே எங்கள் வாக்குகள் யஷ்வந்த் சின்ஹாவிற்குத்தான் என்று அறிவித்து விட்டோம். அதனால் எங்களை சந்தேகிக்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

முர்முவுக்கு ஓட்டு போட்ட மார்க்சிஸ்ட் எமஎல்ஏ

கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களோ, எங்கள் கூட்டணியில் உள்ள எம்எல்ஏ யாரும் கட்சி மாறி வாக்கை அளிக்கவில்லை என்கின்றனர்.

ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினரோ, இதுபோன்ற ரகசிய தகவல்கள் எல்லாம் ஊடகத்தினருக்குத்தான் முதலில் தெரியும். அதனால் உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு சொல்லுங்களேன் என்று நழுவிக் கொள்கின்றனர்.

கேரள மாநில பாஜக தலைமையோ, “முதல் முறையாக பழங்குடியின பெண் ஒருவர் போட்டியிடுகிறார் என்ற மகிழ்ச்சியில் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக கட்சி வேறுபாடுகளை மறந்து முர்முவுக்கு ஆதரவாக அந்த எம்எல்ஏ வாக்களித்திருப்பார் என்று நம்புகிறோம். அந்த ஒரு ஓட்டு மார்க்சிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் 139 ஓட்டுகளுக்கு சமம்” என்கின்றனர்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

“ஒரு செல்லாத ஓட்டு விவகாரம் திமுக கூட்டணியில் அதிருப்தியான சூழல் இருப்பதையே காட்டுகிறது” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குடியரசுத்தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, கட்சி கொறடா உத்தரவின் அடிப்படையில் அவர் கூறும் வேட்பாளருக்கு வாக்களித்தே ஆகவேண்டும் என்ற
வேண்டிய கட்டாயமெல்லாம் கிடையாது.

என்றபோதிலும் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி கட்சியினர் அனைவரும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு வாக்களிப்பது என்று ஒருமனதாக முடிவு எடுத்திருந்தனர். ஆனாலும் யாரோ ஒரு எம்எல்ஏ செல்லாத வாக்கை பதிவு செய்துவிட்டார். நிச்சயமாக இது தவறுதலாக நடந்த ஒன்று எனக் கூறி விட முடியாது.

ஏனென்றால் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் எப்படி வாக்கு பதிவு செய்யவேண்டும் என்பது பற்றி இந்த தேர்தலுக்கு முன்பாகவே திமுக தலைமை விளக்கமாக கூறி இருக்கும். அதனால் செல்லாத ஓட்டு போட்டவர் அதை தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்ல முடியாது.

கண்டுபிடிப்பது கடினம்

மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான அவ்வளவு வாக்குகளும் தற்போது
தேர்தல் ஆணையத்தின் வசம் இருப்பதால் யார் யார் செல்லாத ஓட்டு போட்டனர் என்பதையெல்லாம் அரசியல் கட்சிகள் கண்டுபிடிப்பதும் மிகக் கடினம். ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமே அது தெரியும். இதை அவர்களாக வெளியே சொன்னால்தான் உண்டு.

இந்த செல்லாத ஓட்டு விவகாரம் பாஜகவை எதிர்ப்பதில் திமுக கூட்டணி கட்சிகள், உறுதியாக இல்லையோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இப்பிரச்சினை உச்சகட்டத்தை எட்டலாம். அதே நேரம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சொத்துவரி, மின்கட்டண உயர்வு,
நில அபகரிப்பு, திமுக கவுன்சிலர்களின் அத்துமீறல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்,
கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் என்னும் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் திமுக அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

கண்டுபிடித்து கை கழுவுமா திமுக?

அதனால் செல்லாத ஓட்டு போட்டவர் யார் என்பதை கண்டுபிடித்தாலும் அந்த கூட்டணிக் கட்சியை திமுக கை கழுவுமா? என்பதும் சந்தேகம்தான்.

இதே நிலைமைதான் அகில இந்திய அளவில், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது.
ஏனென்றால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் 17 எம்பிக்கள், 104 எம்எல்ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்து உள்ளனர்.

கேரளாவைப் பொறுத்தவரை முர்முவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஓட்டு கிடைத்திருப்பதை ஒரு நல்ல நிகழ்வாகவே பாஜக பார்க்கிறது. இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையையும் தேசிய பாஜகவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது”என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Views: - 503

0

0