சீல் வைக்கப்பட்ட குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Author: Babu Lakshmanan
22 June 2022, 11:16 am
Quick Share

தூத்துக்குடி : முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபரின் உடல், தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே பிஎம்சி நிறுவனத்திற்கு சொந்தமான சீல் வைக்கப்பட்ட தாதுமணல் குடோன் உள்ளது. இங்கு வாலிபர் ஒருவரது உடல் தலையில் பலத்த காயத்துடன் அழகிய நிலையில் கிடப்பதாக முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் போலீசார் அழுகிய நிலையில், கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த வாலிபர் முள்ளக்காடு மகாலெட்சுமி நகர் பகுதியை சார்ந்த முகம்மது அலி என்பவரின் மகன் முகம்மது ரீயாஸ் (22) என்பது தெரியவந்தது. இவரும் முத்தையாபுரம் ராஜிவ்நகர் பகுதியை சார்ந்த ரவி (எ) போத்தாரவி மகன் மாரி செல்வம் (வயது 23) இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து திருடுவது உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களில் அப்பகுதியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இருவரும் திருடியதை பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மாரிச்செல்வம் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் முகமது ரியாசின் தலையில் தாக்கியதில், அவரது மூளை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரிச்செல்வத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 540

0

0