நம்ம ஊரு நாட்டு நெல்லிக்காயில் ஊறுகாய் போட்டு சாப்பிட்டா… அடடா! ருசி அருமையா இருக்கும்! எப்படி செய்யணும்னு கத்துக்கலாம் வாங்க

Author: Dhivagar
2 September 2021, 5:52 pm
gooseberry pickle recipe at home
Quick Share

நெல்லிக்காயில் பல ரகம் உண்டு. அதிலும் நம்ம ஊரு நாட்டு நெல்லிக்காயை அடிச்சுக்க முடியாது. இந்தியாவில் மிகவும் பழமையான கனி இதுவென்று சொல்லப்படுகிறது. இதை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். அதிலும் நெல்லிக்காயை ஒரு கடி கடித்துவிட்டு உப்பு தொட்டு சாப்பிட்ட நியாபகம் பல 90 களின் இளசுகளுக்கு மறந்திருக்காது. இதை அப்படி மட்டுமில்லாமல் ஊறுகாயாக செய்து காரசாரமாக பழைய சாதத்துக்கு தொட்டுக்க அல்லது சூடான சத்தத்துடன் சேர்த்தும் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த பழம் இரத்தத்தின் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நெல்லிக்காயில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 • நாட்டு நெல்லிக்காய் – 1/2 கிலோ
 • உப்பு – 4-5 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 • எள் எண்ணெய் – 4 டீஸ்பூன்
 • சிவப்பு மிளகாய் தூள் – 5 டீஸ்பூன்
 • பெருங்காயம் – 1 தேக்கரண்டி
 • கடுகு – 1 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

 • அனைத்து நெல்லிக்காயையும் நன்றாக கழுவி உலர வைத்துக்கொள்ளுங்கள்.
 • நெல்லிக்காயை ஒரு களிமண் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். 2-3 நாட்களுக்கு மூடி வைக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஜாடியை எடுத்து குலுக்கி வையுங்கள். நெல்லிக்காய் அனைத்து உப்பையும் உறிஞ்சி மென்மையாக மாறும்.
 • ஊறவைக்காமல், உடனடியாக நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய விரும்பினால், நெல்லிக்காயை 1/2 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைக்கவும். நெல்லிக்காய்கள் மென்மையாக மாறும் வரை வேகவைத்து பிறகு பின்வரும் செயல்முறையைத் தொடரலாம்.
 • ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு கொஞ்சம் சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
 • இப்போது அடுப்பை அணைத்துவிட்டு கொஞ்சம் பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். ஏற்கனவே உப்பு போட்டு ஊறவைத்துவிட்டதால் உப்பு சேர்க்க வேண்டிய தேவை இல்லை.
 • இப்போது நன்கு ஊறியுள்ள ஊறவைத்த நெல்லிக்காயுடன் இந்த மசாலாவைச் சேர்க்கவும். நெல்லிக்காய் உடன் மசாலா நன்றாக கலக்கும் வரை குறைந்தது 3 நாட்களுக்கு ஊறவிட்டு பின்பு நீங்கள் சாப்பிடலாம்.

பரிமாறல்

3 நாட்களுக்கு பிறகு, சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ருசிக்க தயாராக இருக்கும். தயிர் சாதம் அல்லது வேறு ஏதேனும் உணவோடு சேர்த்து சுவைக்கலாம். இது 4-5 மாதங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

Views: - 311

0

0