உலக இரத்த தான தினம்: நலமுடன் வாழ்வோம் நலமுடன் வாழச் செய்வோம்! உயிர்கள் காப்போம்!

14 June 2021, 9:14 am
world blood donor day 2021
Quick Share

ஒவ்வொரு வருடமும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்த தான தினம் ஆக கொண்டாடப்படுகிறது. இந்த உலக ரத்த தான தினம் என்பது ரத்த தானம் செய்ய முன்வரும் அனைத்து தன்னார்வலர்களையும் பாராட்டும் நாளாகவும், மேலும் பலரை ரத்த தானம் செய்ய ஊக்குவிக்கும் தினமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் உலகளவில் இந்த ரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு மனித உடலிலும் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இரத்தத்தில் உள்ள செல்களில் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் என இரண்டு வகைகள் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெள்ளை இரத்த அணுக்கள் உதவியாக இருக்கின்றன. இரத்த சிவப்பணுக்கள் நம் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகின்றன. ‘ஹீமோகுளோபின்’ அல்லது செந்நிறக் குருதியணு என்பது  ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு சேர்க்க உதவுவதும், இரும்புச்சத்தைத் தன்னுள் கொண்டுள்ளதுமான, குருதியிலுள்ள செந்நிறப் பொருள் ஆகும். 

பல்வேறு காரணங்களால் இரத்தத்தின் அளவு குறையக்கூடும். பொதுவாக நம் உடலில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை என்று சொல்லக்கூடிய பிரச்சினை ஏற்படலாம். சத்தான உணவுகள் இன்மை, சீரான தூக்கமின்மை, நமது சூழல் போன்றவற்றால் இரத்தத்தின் அளவு குறையக்கூடும். விபத்துக்கள் நேர்ந்தாலும் அதன் காரணமாக உடலில் இருந்து ரத்தம் வீணாகக்கூடும்.

இது போன்ற பல காரணங்களால் உடலில் இரத்த இழப்பு ஏற்படுகிறது. நம் உடலின் இரத்த அளவு குறையும் போது ஒரே ரத்தம் உள்ள மற்றவரிடம் இருந்து ரத்தம் பெற வேண்டிய சூழல் ஏற்படலாம். உடலில் ரத்தம் பற்றாக்குறை ஏற்படும்போது ​​மற்றவர்களின் இரத்தத்தை எடுத்துக்கொள்ள நேர்வது மருத்துவ நடைமுறையாகும். இதைத்தான் நாம் இரத்த தானம் என்று சொல்கிறோம். 

ரத்த தானம் செய்பவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நாம் இரத்த தானம் செய்யும்போது நமக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ என்று பயம்கொள்ள தேவையில்லை. ஏனென்றால் ரத்த தானம் நம் உடலுக்கும் நன்மை தரக்கூடிய ஒன்றுதான். இரத்தத்தில் பொதுவாக இரும்புச்சத்து அதிகம் இருக்கும். இது நம் உடலில் உள்ள கல்லீரல் மற்றும் இதயத்தின் மீது படிந்து உடலுக்கு சோர்வை ஏற்படுத்தும்.

அதுவே இரத்த தானம் செய்யும் போது, ​​இந்த அதிகப்படியான இரும்புச்சத்து இரத்தத்துடனேயே தானம் செய்யபடுவதால், நம் உடலில் இரும்புச்சத்து சீரானதாக இருக்கும். ஒரு யூனிட் ரத்தம் தானம் செய்தால் அதை 3 பேருக்குப் பயன்படுத்த முடியும். சில நேரங்களில் அதிக ரத்தம் தேவைப்படும் நிலையால் ஒரு நபருக்கே கூட ஒரு யூனிட் முழுமையாக பயன்படுத்தப்படலாம். அது மட்டுமில்லாமல் நாம் செய்யும் ரத்த தானம் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவினோம் என்ற மன நிம்மதியையும் தருகிறது.

இன்றைய நவீன உலகில் மருத்துவத் துறை எண்ணிபார்க்க முடியாத அளவில் வளர்ந்துள்ளது. முன்பெல்லாம் ரத்தம் மட்டுமே தானம் வழங்கிய காலம் போய், பிளாஸ்மா மற்றும் ஹீமோகுளோபின் போன்ற இரத்தத்தின் கூறுகளும் பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளது. இதனால் இரத்த தான முறைகளே புதுமையடைந்துள்ளன.

ஒரு யூனிட் ரத்தம் தானம் செய்தால், நம் உடலில் 650 கலோரிகள் குறைவதாக கூறப்படுகிறது. எனவே இரத்த தானம் செய்வதால் நம் உடலுக்கும் நன்மைகள் கிடைக்கும்.

எனவே, முடிந்தவரை வாய்ப்புக் கிடைக்கும் போது, இரத்த தானம் செய்வோம், நாம் நலமடைந்து மற்றவர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்போம்! உயிர்கள் காப்போம்!

Views: - 177

0

0