ஜிகா வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? இதற்கான வைத்தியம் என்ன?

9 July 2021, 5:46 pm
zika virus symptoms, treatment explained
Quick Share

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று மொத்தம் 13 ஜிகா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. வைரஸ் கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சரி இந்த ஜிகா வைரஸ் என்றால் என்ன? இது எப்படி பரவும்? இந்த வைரஸ் நம் உடலில் நுழைந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்? இதற்கு வைத்தியம் என்ன என்பன போன்ற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவும்?

பாதிக்கப்பட்ட ஏடிஸ் இன கொசுக்கள் (Ae. aegypti மற்றும் Ae. albopictus) கடிப்பதால் ஜிகா வைரஸ் பரவுகிறது. 

இந்த ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் தான் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது.  இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணிப் பெண்ணிலிருந்து கருவுக்கும் பரவி குழந்தைக பிறவி குறைபாடுகளுடன் பிறக்கவும் காரணமாகக்கூடும்.

குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவு போன்ற கர்ப்ப கால சிக்கல்களையும் இந்த ஜிகா வைரஸ் ஏற்படுத்தக்கூடும். ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலுறவு கொள்வதாலும் இந்த நோய் பரவக்கூடும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.

ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள்

கொசுக்களால் பரவும் நோய்க்கான அறிகுறிகளில், லேசான காய்ச்சல், தலைவலி உடல் அரிப்பு, கண் எரிச்சல், தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு அல்லது தலைவலி ஆகியவை அடங்கும். 

ஜிகா வைரஸ் நோயின் அடைகாக்கும் காலம் 3–14 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் அறிகுறிகள் பொதுவாக 2–7 நாட்கள் வரை நீடிக்கும். ஜிகா வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

ஜிகா வைரஸ் சிகிச்சை என்ன? 

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வழங்கிய தகவலின்படி, ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.

காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

நிறைய ஓய்வு எடுக்க வேண்டும்.

உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க நிறைய நீராகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டால் அவற்றை குறைக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்பிரின் மற்றும் பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDS) எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வேறு ஏதேனும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

Views: - 325

0

0