அனைத்து வரி இனங்கள் செலுத்துவதற்கான சிறப்பு முகாம் துவக்கம்…

15 February 2020, 1:03 pm
SAlem Spl Camp - updatenews360
Quick Share

சேலம்: சேலம் சூரமங்கலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் செலுத்துவதற்கான சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரி இனங்களையும் சிரமமின்றி செலுத்தும் வகையில் சிறப்பு முகாமினை சூரமங்கலம் மண்டல அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் புதிய கட்டிடத்திற்கான சொத்துவரி, காலி வீட்டு மனை வரி மற்றும் குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், பாதாள சாக்கடை வைப்புத்தொகை, தொழில்வரி, கட்டிட வரைபட அனுமதி என்பன உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

மேலும் இம்முகாமில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து ஏழு நாட்களுக்குள் உரிய ஆணை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதில் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.