மாதவிடாய் வலியை போக்க பக்க விளைவுகள் இல்லாத பலன் தரும் வீட்டு மருத்துவம்!!!

29 January 2021, 6:21 pm
Quick Share

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தை நெருங்கும் போதே பயம் ஆரம்பித்து விடும். ஏனெனில் அந்த நேரத்தில் அவர்கள் படும் அவஸ்தை அந்த அளவிற்கு இருக்கும். வயிறு வலி, உடல் வலி, உடல் சோர்வு, கால் வலி, முதுகு வலி, மனநிலை மாற்றம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பருவமடைந்த காலம் முதல் மெனோபாஸ் வரை வயிறு வலியால் அவதிப்படும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்றாலும் வலியின் வீரியத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். 

வயிறு வலி தானே என்று நாம் சாதாரணமாக நினைத்து விட முடியாது. தாங்க முடியாத வலியால் ஒரு சில பெண்கள் அவதிப்படுவதை பார்க்கும் போது தான் அதன் வலி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு சிலரால் மாதவிடாயின் மூன்று நாட்களிலும் எழுந்திருக்கவே முடியாது. படுக்கையில் தான் இருப்பார்கள். ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பே வலி ஆரம்பித்து விடும். இத்தகைய கொடுமையான வலியில் இருந்து மீண்டு வர உதவும் சில இயற்கை மருத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

சீரக கஷாயம்:

தாங்க முடியாத மாதவிடாய் வலியை குறைக்க சீரக கஷாயம் உதவும். அதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பத்து கிராம் சீரகம் சேர்த்து 50 ml தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் பாதியாக குறையும் வரை காத்திருக்கவும். தண்ணீர் குறைந்ததும் அதில் ஒரு சிட்டிகை பெருங்காய பொடி, இந்துப்பு சேர்த்து கலக்கவும். இந்த சீரக கஷாயத்தை வெதுவெதுப்பாக இருக்கும் போது பருக வேண்டும். மாதவிடாய் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே இதனை காலை, மாலை என இரு வேலைகளிலும் உணவிற்கு முன்பு பருகுங்கள். ஒவ்வொரு மாதமும் இதனை நீங்கள் செய்து வந்தால் வலி குறைவதை காணலாம். 

வெந்தய உருண்டை:

வெந்தயத்தை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடிக்கும் போது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பது நமக்கு தெரியும். அதே போல வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரையும், வெந்தயத்தையும் சேர்த்து விழுங்க வர வயிறு வலி குறையும். ஆனால் அதன் கசப்பு தன்மைக்காக வெந்தயத்தை தவிர்ப்பவர்களும் உண்டு. அதற்கு வெந்தயத்தை பொடியாக்கி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். மாதவிடாய் சமயத்தில் இந்த பொடியை எடுத்து அதனோடு பனை வெல்லம், சுக்கு பொடி, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து அதனை நெல்லிக்காய் அளவு உருண்டையாக்கி காலை, மாலை என இரு வேலையிலும் சாப்பிட்டு வர வேண்டும். இது வயிறு வலியை குறைப்பதோடு, இடுப்பு வலியையும் குறைத்து, இழந்த இரத்தத்தை ஈடு செய்யும். 

மாதவிடாய் நாட்களில் உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருக்கும். ஆகவே அந்த சமயத்தில் காரமான உணவுகள், மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய் பண்டங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை வலியை அதிகமாக்கி விடும். உணவில் பெருங்காயம் சேர்ப்பது வலியை குறைக்க உதவும். சீரக தண்ணீர் நல்ல தரும். மாதவிடாய் வலியை நீங்கள் ஒரு போதும் தடுக்க முடியாது. ஆனால் அதனை கட்டுக்குள் வைக்க மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றி பலனடையலாம்.

Views: - 0

0

0